வலைப்பதிவுகள்

ஒரு கும்பாபிஷேக தரிசனம் பார்ப்பதால் நமக்கு எவ்வளவு புண்ணியம் கிடைக்குறது தெரியுமா: -
blog
Posted by : Moipay
2025-03-14 | 19:13 PM
கோவில் கும்பாபிஷேகம் பார்த்திருப்பீர்கள், கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் அந்த கும்பாபிஷேகம் என்பது என்ன அதில் என்ன என்ன பூஜை செய்கிறார்கள் என்று பலருக்கும் தெரியாது. வாருங்கள் அது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
கோவிலுக்கு செல்வது பலருக்கும் பிடித்தமான ஒன்று. பலரும் கோவிலுக்கு செல்ல காரணம் கடவுள் இருக்கிறார் என்ற நம்பிக்கையில் தான். ஒவ்வொரு கடவுளுக்கும் ஒரு அடையாளமும், வரலாறும் உண்டு. கோவில்களுக்கு கும்பாபிஷேகம் என்ற சடங்கு நடத்தப்படுவதுண்டு. இது அனைவருக்கும் தெரிந்த சடங்கு தான். ஆனால் இச்சடங்கு செய்வதன் காரணம் பலருக்கும் தெரியாது. அதை பார்ப்பதால் நமக்கு என்ன பயன் கிடைக்கிறது என்றும் தெரியாத ஒன்று தான். சரி வாருங்கள் கும்பாபிஷேகம் பற்றி சற்று தெரிந்து கொள்ளலாம்.
அதற்கு காலங்கள் தோறும் வேள்வி செய்து அதாவது பூஜை செய்து அந்தக் கடவுளுடைய அருளை அனைவரும் பெற செய்யும் நிகழ்ச்சியே “கும்பாபிஷேகம்” ஆகும். அதனை நாம் பார்ப்பதனால் நமக்கு கோடி புண்ணியம் கிடைக்கிறது.
இறைவனுக்கு கோயில் கட்டி வழிபடுவது வழக்கம். புதிதாக ஓர் ஆலயம் எழுப்பப்படும்போது, விக்கிரகங்களை ஆலயத்தினுள் பிரதிஷ்டை செய்வதோடு மட்டும் ஆலயம் முழுமை பெற்றுவிடுமா என்றால், நிச்சயமாக இல்லை. அது எப்போது முழுமை பெறும்? ஆலயத்தில், “கும்பாபிஷேகம்” நடந்த பின்னர்தான் அது வழிபாட்டுக்கு உரிய ஸ்தலமாக முழுமை பெறுகிறது.
கோவிலை வேத சாஸ்திர முறைப்படி கருங்கற்களைக் கொண்டு கட்டி அதில் யந்திர ஸ்தாபனம் செய்து தெய்வத் திருவுருவங்களைப் பிரதிஷ்டை செய்கிறார்கள். கும்பம் என்றால் “நிறைத்தல்” என்று பொருள். நம் ஆலயங்களில் வீற்றிருக்கும் விக்கிரகங்களுக்கு, அபிஷேகங்கள் மூலம் இறைசக்தியை நிறைத்தலே கும்பாபிஷேகம் ஆகும். இதனை சைவர்கள் “மகா கும்பாபிஷேகம்” என்றும் வைணவர்கள் “மகா சம்ப்ரோக்ஷணம்” என்றும் அழைக்கிறார்கள்.
மேலும் சக்தி வாய்ந்த மந்திரங்கள் மூலம் யாகங்கள் செய்யப்பட்ட தீர்த்தங்களால் இறைவன் மீதும், கோபுரக் கலசங்கள் மீதும் புனித தீர்த்தங்களால் அபிஷேகம் செய்யப்படுகிறது. கும்பாபிஷேகம் மூலமாகவே விக்கிரகங்கள் தெய்வசக்தியைப் பெறுகின்றன. பெரும்பாலும், கும்பாபிஷேகமானது 12 வருடங்களுக்கு ஒருமுறை செய்யப்படுகிறது. இதன் காரணம், நாம் கும்பாபிஷேகம் செய்யும் போது சாத்தப்பட்ட அஷ்டபந்தனமானது 12 வருடங்கள் வரைதான் சக்தியோடு இருக்கும். மேலும் கோயில்களில் ஏதேனும் புனரமைப்பு செய்தாலும் கும்பாபிஷேகம் செய்யப்பட வேண்டும். குரு ஒவ்வொரு ராசியிலும் சுமார் ஒரு வருடம் வீதம் 12 ராசிகளை சுற்றி வர 12 வருடங்கள் ஆகும்.
கும்பாபிஷேகத்தில் உபயோகப்படுத்தப்படும் கும்பம் கடவுளின் உடலையும், கும்பத்தின் மீது சுற்றப்பட்ட நூல் 72,000 நாடி, நரம்புகளையும், கும்பத்தில் ஊற்றப்படும் நீர் ரத்தத்தையும், அதனுள் போடப்படும் தங்கம் ஜீவனையும், மேல் வைக்கப்படும் தேங்காய் தலையையும், பரப்ப பட்ட தானியங்கள் ஆசனத்தையும் குறிக்கின்றது.
இது மட்டும் இல்லாமல் யாக மேடையில் சந்தனம், மலர்கள் மற்றும் வஸ்திரம் ஆகியவையும் அமைக்கப்படுகின்றன. பழமையான கோவில் என்பது எந்த வகையில் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருந்தாலும் அது ஒரு யந்திர வடிவத்தில் அமைந்துள்ளதாகும். நான்கு திசைகளிலும் நான்கு வாயில், உள்ளே ஒரு சக்தி மையம், அந்த சக்தி மையத்தை தக்கவைத்துக்கொள்ளும் விதமாக, யந்திர சாஸ்திர அடிப்படையில் கட்டப்பட்டுள்ள கட்டிடகலையால் உருவாக்கப்பட்ட ஒரு நேர்மறை சக்தி கொண்டுள்ள பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளும் ஒரு சக்தி மூலம்.
பழமையான கோவில் என்று எடுத்துக்கொண்டால் அவை ஆகம விதிப்படி அமைக்கப்பட்டுள்ளதா அல்லது சித்தர் வழி, யோக விஞ்ஞானப்படி நிர்மானிக்கப்பட்டுள்ள கோயிலா என்று இரண்டு வகையாக பிரிக்கலாம். பொதுவாக ஆகம முறைப்படி கட்டப்பட்ட கோவில்கள் பனிரெண்டு வருடங்களுக்கு ஒருமுறை குடமுழுக்கு செய்ய வேண்டும் என்பது வழக்கத்தில் உள்ள ஒரு முறையாகும். ஏனென்றால் பெருவாரியான மக்கள் உள்ளே வந்து சொல்லும்பொழுது கோவிலின் சக்தி மூலம், அது நாளுக்கு நாள் தேய்ந்து வரும்.
ஒவ்வொரு கோவிலும் தினசரி பூஜை முறை என்று வழக்கத்தில் உண்டு. அவை மூலம் இழந்த சக்தியை அன்றாடம் சுத்திகரித்து நிலைநிறுத்தும் ஒரு வழிமுறையாகும். அப்படி செய்தபோதும் 12 வருடத்தில் அதன் சக்தி பெரும்பாலும் முழுவதும் குறைந்துவிடும். குறைந்த சக்தியை புதுப்பித்து, கோவில் கட்டிடங்கள் சேதங்கள் ஏதும் ஏற்பட்டு இருப்பின் அவைகள் அனைத்தும் சரி செய்யப்பட்டு கோயில் முழுமையாக புதுப்பிக்கப்பட்டு குடமுழுக்கு செய்யப்பட்டு புதிதாக சக்தி அந்த கோவிலுக்கு ஊட்டப்படும்.
குறிப்பாக கோவிலில் கலசத்தில் நிரப்பப்பட்டுள்ள தானியங்களை மாற்றம் செய்வர். வரகு அரிசி போன்ற தானியங்கள் அடுத்த 12 வருடங்களுக்கு கோபுர கலசத்தில் கெடாமல் பாதுகாக்கப்படுகிறது. பஞ்சம் அல்லது இயற்கை சீற்றங்களால் பயிர்களுக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டாலும் கோபுர கலசத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ள தானியங்களை எடுத்து பயிரிட்டு மறுபடியும் பழைய நிலைக்கு திரும்புவதற்கு ஒரு வாய்ப்பாக ஏற்படுத்தியுள்ளார்கள். அந்த கோபுர கலசத்தின் வடிவம் கூம்பு போன்ற அமைப்பு கோவிலில் அமைந்துள்ள சக்தியை சுத்திகரிக்கும் ஒருமுறையாகும்.
கும்பாபிஷேகத்தில் விக்கிரகப் பிரதிஷ்டையில் மேற்கொள்ள வேண்டிய பூஜைகள்:-
அனுக்ஞை – ஆற்றல் மிக்க ஓர் ஆசாரியனைத் தேர்ந்தெடுத்து இறைவனின் அனுமதி பெற்று நியமனம் செய்தல்.
சங்கல்பம் – இறைவனிடம் நமது தேவைகளைக் கோரிக்கையாக வைத்தல்.
பாத்திர பூஜை – பூஜை பாத்திரங்களுக்குரிய தேவதைகளுக்குப் பூஜை செய்தல்.
கணபதி பூஜை – கணபதியை வழிபடுதல் .
வருண பூஜை – வருண பகவானையும், சப்த நதி தேவதைகளையும் வழிபடுதல்.
பஞ்ச கவ்யம் – பசு மூலமாக கிடைக்கும் பால், தயிர், நெய், பசு நீர், பசு சாணம் ஆகியவற்றை வைத்துச் செய்யப்படும் கிரியை.
வாஸ்து சாந்தி – தேவர்களை வழிபடுதல்.
பிரவேச பலி – திக்பாலர்களை வணங்குதல்.
மிருத்சங்கிரஹணம் – ஆலயம் நிர்மாணம் செய்ய பூமாதேவியை கஷ்டப்படுத்தியதன் காரணமாக பூமா தேவியை மகிழ்விக்கச் செய்யப்படும் பரிகாரம். மண் எடுத்து வழிபடுவது.
அங்குரார்ப்பணம் – எடுத்த மண்ணில் விதைகளைப் பயிரிட்டு முளைப்பாரி வளரச் செய்தல். இதில் 12 சூர்யர்களான வைகர்த்தன், விவஸ்வதன், மார்த்தாண்டன், பாஸ்கரன், ரவி, லோகபிரகாசன், லோகசாட்சி, திரிவிக்ரமன், ஆதித்யன், சூரியன், அம்சுமாலி, திவாகரன் போன்றவர்களை வழிபடுதல். மேலும் சந்திரனையும் வழிபடுதல்.
ரக்ஷாபந்தனம் – ஆசாரியனுக்கும் மற்ற உதவி ஆசாரியர்களுக்கும் கையில் காப்புக் கட்டுதல்.
கும்ப அலங்காரம் – கும்பங்களை இறைவன் உடலாக நினைத்து அலங்காரம் செய்தல்.
கலா கர்ஷ்ணம் – விக்கிரகத்தில் இருக்கும் சக்தியை கும்பத்துக்கு மந்திரப் பூர்வமாக அழைத்தல்.
யாகசாலை பிரவேசம் – கலசங்களை யாகசாலைக்கு அழைத்து வருதல்.
சூர்ய, சோம பூஜை – யாகசாலையில் உள்ள சூரிய சந்திரனை வழிபடுதல்.
மண்டப பூஜை – யாகசாலையை பூஜை செய்தல்.
பிம்ப சுத்தி – விக்கிரகங்களை மந்திரத்தின் மூலமாக சுத்தம் செய்தல்.
நாடி சந்தானம் – இறைவனின் சக்தியில் ஒரு பகுதியை ஒரு இணைப்பு மூலமாக விக்கிரகங்களுக்குக் கொண்டு சேர்த்தல்.
விசேஷ சந்தி – 36 தத்துவத் தேவதைகளுக்குப் பூஜை செய்வது. உலகத்தில் உள்ள அனைத்து ஆத்மா பித்ருக்களுக்கும் சாந்தி செய்வது.
பூத சுத்தி – பூத (மனித) உடலை தெய்வத்தின் உடலாக மந்திரப் பூர்வமாக மாற்றி அமைத்தல்.
ஸ்பர்ஷாஹுதி – 36 தத்துவங்களை யாகத்திலிருந்து மூல விக்கிரகங்களுக்குக் கொண்டு சேர்த்தல்.
அஷ்டபந்தனம் – (மருந்து சாத்துதல்) எட்டு பொருள்களால் ஆன இம்மருந்தினால் மூர்த்தியையும், பீடத்தையும் ஒன்று சேர்த்தல்.
பூர்ணாஹுதி – யாகத்தைப் பூர்த்தி செய்தல்.
கும்பாபிஷேகம் – யாக சாலையில் மூர்த்திகளுக்குரியதாக வைத்துப் பூஜிக்கப்பட்ட கும்ப நீரை அந்தந்த மூர்த்திகளுக்கு அபிஷேகம் செய்தல்.
மஹாபிஷேகம் – கும்பாபிஷேகம் முடிந்த பிறகு மூல விக்கிரகத்துக்கு முறைப்படி அபிஷேகம், அலங்காரம் செய்தல்.
மண்டலாபிஷேகம் – இறைவனை 48 நாட்கள் விஷேச அபிஷேக பூஜைகள் செய்து முழு சக்தியுடன் இருக்கச் செய்தல்.
கும்பாபிஷேகத்தின் போது நடத்தப்படும் சடங்குகளும் அவற்றிற்குரிய விளக்கங்களும்:-
ஆவாஹனம்:-
ஆவாஹனம் என்றால் கும்பத்தில் உள்ள நீருக்குள் மூர்த்திகளை எழுந்தருள செய்தல் என்பது பொருள். கும்பத்தை முதலில் கோயிலில் உள்ள தெய்வத்திருவின் அருகில் வைத்து தர்ப்பை, மாவிலை ஆகியவற்றைக் கொண்டு மந்திரங்கள் ஓதி, பிம்பத்தில் விளங்கும் மூர்த்தியை கும்பத்தில் எழுந்தருளச் செய்வார்கள். பிறகு அந்த கும்பத்தை யாகசாலைக்கு எழுந்தருளச் செய்வார்கள். தர்ப்பையின் மூலம் கும்பத்தில் உள்ள தெய்வீக சக்தியை பிம்பத்திற்கு மீண்டும் செலுத்துவார்கள்.
கும்பம்:-
யாகசாலையில் மந்திரம், கிரியை, தியானம் ஆகியவற்றுடன் வளர்க்கப்பட்டு எழும் புகையுடன் வேத ஒலி, சிவாகம ஒலி, மறை ஒலி ஆகியவற்றுடன் பக்தர்களின் நல்ல எண்ணங்களும், எங்கும் நிறைந்திருக்கின்ற திருவருள் சக்தியை தூண்டிவிட்டு கும்பத்தில் விளங்கச் செய்யும். அப்போது கும்பம் தெய்வீக சக்தி பெறும். இந்த கும்பத்தை சிவனின் வடிவமாக ஆகமங்கள் கூறுகின்றன.
பாலாலயம்:-
கும்பத்தை கோயிலில் உள்ள தெய்வச்சிலை அருகில் வைப்பார்கள். தர்ப்பை, மாவிலை கொண்டு மந்திரங்கள் ஓதி, தெய்வ வடிவில் விளங்கும் மூர்த்தியை கும்பத்திற்கு மாற்றுவார்கள். பின்பு அதை வேறிடத்திற்கு எழுந்தருளச் செய்வார்கள். இதை பாலாலய பிரவேசம் என்பர்.
கிரியைகள்:-
கும்பாபிஷேகம் நடக்கும்போது ஒரு காலத்தில் 64 கிரியைகள் செய்யப்பட்டன. காலப்போக்கில் 55 கிரியைகள் செய்யப்பட்டன. ஆனால் தற்போது எல்லா கிரியைகளும் செய்யப்படுவதில்லை. 64ல் முக்கியமான 13 கிரியைகளை மட்டும் தேர்ந்தெடுத்து கும்பாபிஷேகத்தை நடத்துகின்றனர்.
ஆசாரியவர்ணம்:-
கும்பாபிஷேகத்திற்கென கிடைக்கும் பொருளுக்கு பூஜை செய்ய வேண்டும். இதை தன பூஜை என்பர். பூஜை செய்த பணம் அல்லது பொருளில் ஒரு பகுதியை கட்டட வேலைக்கும், ஒரு பகுதியை நித்திய, மாதாந்திர, விசேஷ நட்சத்திர பூஜை உற்சவத்திற்கும், மூன்றாவது பாகத்தை ஆபரணங்கள் வாங்கவும் ஒதுக்குவார்கள். இப்படியே கோயில் காரியங்கள் சம்பந்தப்பட்ட 11 பாகமாக இந்த செல்வத்தை பிரிப்பார்கள். கும்பாபிஷேகத்தை நடத்தும் பிரதான ஆசாரியரை வணங்கி, இந்த செல்வத்தைக் கொண்டு குடமுழுக்கு நடத்தி தாருங்கள் என கேட்டுக்கொள்ள வேண்டும். இதையே ஆசாரியவர்ணம் என்பர்.
கடஸ்தாபனம்:-
கும்பாபிஷேகத்தில் மிக முக்கியமானது கடஸ்தாபனம். கலசம் நிறுவுதல் என்பது இதன் பொருள். தங்கம், வெள்ளி, தாமிரம், மண் ஆகிய ஏதாவது ஒன்றில் கும்பங்கள் செய்யப்படும். கும்பங்களை இப்படித்தான் அமைக்க வேண்டும் என்ற வரையறைகள் உள்ளன. இவ்வாறு அமைக்கப்பட்ட கும்பங்களை குறைகள் இல்லாமல் மந்திரித்து, அக்னியில் காட்டுவார்கள். சிவப்பு மண்ணை கும்பத்தின் மீது பூசி, நூல் சுற்றி ஆற்றுநீர் அல்லது ஊற்று நீரால் நிரப்புவார்கள். கும்பத்தின் மேல் வாய் பகுதியில் மாவிலைகளை செருகி, தேங்காய் வைப்பார்கள். கும்பத்திற்குள் நவரத்தினம், தங்கம், வெள்ளி, நவதானியம் ஆகியவற்றை பரப்புவார்கள். எந்த மூர்த்திக்கு குடமுழுக்கு நடக்கிறதோ அந்த மூர்த்தியின் உடலாக அந்த கும்பம் கருதப்படும்.
கும்பாபிஷேகத்தின் வகைகள்:-
ஆவர்த்தம் – ஓரிடத்தில் புதிதாக ஆலயம் அமைத்துப் பிரதிஷ்டை செய்யப்படும் மூர்த்திகளுக்குக் கும்பாபிஷேகம் செய்யப் படுவது.
அனாவர்த்தம் – பூஜை இல்லாமலும் ஆறு,கடல் இவற்றால் சிதிலமடைந்திருந்தாலும் அக்கோயிலைப் புதிதாக நிர்மாணம் செய்து கும்பாபிஷேகம் செய்வது.
புனராவர்த்தம் – கருவறை,பிரகாரம்,கோபுரம் முதலியன பழுது பட்டிருந்தால் பாலாலயம் செய்து அவற்றை புதுப்பித்து அஷ்ட பந்தனம் சார்த்தி பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் செய்வது.
அந்தரிதம் - மனிதர்களின் தீமைகளால் புனிதம் இழந்த கோவில்களை மீண்டும் புதுப்பித்து புனிதபடுத்துவதாகும்.
யாக குண்டத்தின் வகைகள்:
ஏக குண்டம் – ஒரு குண்டம் அமைப்பது
பஞ்சாக்னி – ஐந்து குண்டம் அமைப்பது
நவாக்னி – ஒன்பது குண்டம் அமைப்பது
உத்தம பக்ஷம் – 33 குண்டம் அமைப்பது
கும்பாபிஷேகத்திற்கு செய்யப்படும் யாகங்களை எத்தனை தடவை செய்யவேண்டும் என்ற விதிமுறை உள்ளது. 2 காலம், 4 காலம், 8 காலம், 12 காலம் வரை செய்யும் முறை வழக்கத்தில் உள்ளது.
யாக குண்டங்கள் தெய்வங்களைப் பொறுத்து மாறுபடுகின்றன. அவை
விநாயகர் - பஞ்சகோணம்
முருகர் - ஷட்கோணம்
சிவன் - விருத்தம்
அம்மன் - யோணி
பரிவாரம் - சதுரம்
முதலில் ஆகம சாஸ்திரப்படியும், சிற்பசாஸ்திரப்படியும் முறையாக கல்லினால் வடிவமைத்த தெய்வத் திருவுருவங்களை தானிய வாசம் ஜலவாசம் செய்வார்கள். தங்கம், வெள்ளி அல்லது செம்பு தகட்டில் மந்திரங்களை எழுதி முறைப்படி ஒரு மண்டலம் (48 நாட்கள்) பூஜை செய்து, அவற்றை தெய்வசிலைகளைப் பிரதிஷ்டை செய்யும் இடத்தில் பதிய வைப்பார்கள். கல்லினாலும், மண்ணாலும், உலோகத்தாலும், மனிதனால் உருவாக்கப்பட்ட தெய்வ உருவங்களுக்குச் சத்தியை கொடுப்பதற்காகச் செய்யப்படும் வேள்வி முறைகளில் ஆவாகனம், யாகசாலையில் மந்திரம், கடஸ்தாபனம் ஆகிய மூன்று வழிமுறைகள் மிக முக்கியமானவை.
கும்பாபிஷேகத்தில் மிக முக்கியமானவை, சொல்லப்படும் மந்திரங்கள், மந்திரம் என்பதற்கு சொல்பவனைக் காப்பது என்று பொருள். அவற்றைச் சரியான உச்சரிப்புடன், மிகுந்த பக்தியுடன் சொல்வது மிகவும் முக்கியமானது. அந்த மந்திரங்களைச் சொல்லி இறைசக்தியைத் தருவித்து ஒருங்கிணையச் செய்து ஒன்றாகக் குவியச் செய்து இறைவனின் கருவறையில் அதன் சக்தியை நிலை பெறச் செய்தால் தான் அது இறைவனின் உறைவிடமாக மாறும்.
தெய்வ சக்திகள் உருவேற்றப்பட்ட கலச தீர்த்தங்களால் சிலைகளுக்கு அபிஷேகம் செய்து கருவறையில் யந்திரங்கள் பதித்து சிலைகளைப் பிரதிஷ்டை செய்வார்கள். கோபுரத்தின் மேலுள்ள கலசங்களுக்கும் உயிரூட்டப்பட்ட சக்தி வாய்ந்த கலச தீர்த்தங்களால் அபிஷேகம் செய்யப்படும். ஆகம விதிப்படியும் சாஸ்திர முறைப்படியும் தெய்வ விக்கிரகங்களின் சக்தியையும் கோபுர கலசத்தில் உருவேற்றிய சக்தியையும் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊக்கப்படுத்தி மனித வாழ்க்கை மேம்படுவதற்காக நடைபெறுவதே மகா கும்பாபிஷேகம்.
மகா கும்பாபிஷேகம் நடைபெறும் நாளில் இறைவனை வணங்குவோருக்கு முப்பத்து முக்கோடி தேவர்களும் ஆசி வழங்குவார்கள் என்பது வழி வழியாக இருந்து வரும் நம்பிக்கை. இப்படிப் பலமுறை கும்பாபிஷேகங்கள் செய்யப்பட்ட பழமை வாய்ந்த கோயில் கோபுரங்களைத் தரிசனம் செய்யும் போதும், அந்தக் கோயிலுக்குள் நுழையும் போதும் ஓர் அற்புத சக்தியானது நம்மை தீண்டப்படுவதை ஆன்மிக அன்பர்கள் உணர்ந்திருக்கலாம்.
கும்பாபிஷேகத்தை அஷ்டாபந்தன மகாகும்பாபிஷேகம் என்று சொல்வதை நாம் கேள்விப்பட்டிருப்போம். பீடத்தின் மீது வைக்கப்படும் தெய்வ திருவுருவங்கள் உறுதியுடன் நிலைத்து நிற்க கொம்பரக்கு சுக்கான்தான், குங்குலியம், கற்காவி, செம்பஞ்சி, ஜாதிலிங்கம், தேன்மிளுகு, எருமையின் வெண்ணை ஆகிய எட்டுவகை மருந்துகளைக் கலந்து சார்த்தப்படும். இதை அஷ்டபந்தனம் என்றும் குறிப்பிடுகிறோம்.
கும்பாபிஷேகம் செய்த தண்ணீரின் பயன்கள்:-
கும்பாபிஷேகம் செய்த பின் அந்த தண்ணீரை பருகிக்கொள்ள அதனை கொடுப்பார்கள். சில கோவில்களில் அதனை இவ்வளவு ரூபாய் வென்று விற்பார்கள். அதனை வாங்கி கொண்டால் அதனை பக்கத்தில் உங்களுடைய வீடு இருந்தால் யாருடைய காலில் படாதவாறு கீழே சிந்தாமல் எடுத்துவரவேண்டும். அவ்வாறு செய்ய முடியாதவர்கள் அந்த தண்ணீரை வேறு ஒரு பாட்டில் ஊற்றி பத்திரமாக வீட்டிற்கு எடுத்து செல்லலாம்.
பாட்டிலில் ஊற்றி விட்டோம் என்று கலசத்தை தூக்கி எறிய வேண்டாம். அதனையும் பத்திரமாக எடுத்துவந்து தண்ணீரை அதில் ஊற்றி பூஜை அறையில் வைக்கவேண்டும். இதனுடைய பலன் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று வேண்டி கொண்டு வீட்டில் இருக்கும் அனைவருக்கும் அதனை குடிக்க கொடுக்க வேண்டும். பின்பு மா இலையை கொண்டு வீடுகளில் இருக்கும் அறை அனைத்திலும் வீடு முழுவதுமே தெளிக்கவேண்டும். தெளித்த பின் மீதி தண்ணீர் இருந்தால் உடனே அதனை நாம் வளர்க்கக்கூடிய செடிகளில் ஊற்றிவிடவேண்டும். பக்கத்தில் இருப்பவர்களுக்கு கொடுக்கலாமா என்று கேட்டால் தரலாமாக கொடுக்கலாம்.
கலசங்களை என்ன செய்யவேண்டும்:-
வீட்டில் செய்யக்கூடிய பூஜைகளில் மண் கலயங்களை பயன்படுத்திக்கொள்ளலாம்.அப்படி இல்லையென்றால் வீட்டிலேயே நிரந்தர கலசமாக வைத்துவிடலாம். நூலை கழட்டாமல் அப்படியே வைத்து நிரந்தரமாக தண்ணீர் அல்லது அரிசி கொட்டி வழிபடலாம். அப்படி இல்லையென்றால் வீட்டு பூச்செடி வளர்க்கலாம். அப்படி வளர்க்கும் போது பானை உடைந்துவிட்டால் அது தவறு கிடையாது. மண் பொருளை மண்ணோடு சேர்த்துவிடலாம்.
கும்பாபிஷேகம் பார்ப்பதால் கிடைக்கும் பலன்கள்:-
கும்பாபிஷேகத் தினத்தன்று ஆலயத்துக்குச் சென்று வழிபட்டால், முப்பது முக்கோடித் தேவர்களின் ஆசி நமக்குக் கிட்டும். தவிர்க்க முடியாத காரணங்களால் கும்பாபிஷேகத்தில் கலந்துகொள்ள இயலாதவர்கள், 48 நாட்கள் நடக்கும் மண்டல பூஜையில் கலந்துகொண்டு நன்மைகளைப் பெறலாம். பிறவிப்பெரும்பயன் அடையலாம். ஒரு கும்பாபிஷேகத்தைக் காண்பது மூன்று ஜென்மங்களில் நாம் செய்த பாவத்தைப் போக்கக் கூடியது. கோபுர தரிசனம் கோடி புண்ணியம்!!!
இந்த கும்பாபிஷேக விழாவிற்கும் எங்களின் “வியனி மொய்பே” மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எப்படி என்று யோசிக்கிறீங்களா!!. ஆம் கும்பாபிஷேகத்திற்கு தேவைப்படும் அணைத்து விஷயங்களையும் எங்களின் “வியனி மொய்பே” மூலம் செய்து கொள்ளலாம். சமையல்காரர், ஒலி & ஒளி, பூ அலங்காரம், புரோகிதர் அல்லது அர்ச்சகர் போன்ற கோவிலுக்கு தேவையான அணைத்து விஷயங்களையும் எங்களின் “வியனி மொய்பே” மூலம் தாங்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம். இது தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். மேலும் தங்களின் பொண்ணான நேரத்தையும், மட்டுமின்றி அலைச்சலையும் போக்க வழிசெய்கிறது.
சமீபத்திய வலைப்பதிவுகள்
blog
Posted by 10-07-2022
இரு இதயங்கள் இணையும் திருமணவிழாவை பற்றி தெரிந்து கொள்வோமா
திரு என்பது தெய்வத்தன்மை எனவும், மனம் என்பது இணைதல் எனவும்
blog
Posted by 10-07-2022
திருவிழாக்கள் இனம், மதம், மொழி கடந்து உலகில் உள்ள எல்லா மக்களாலும் கொண்டாடப்படுகின்றன
திருவிழா என்றாலே கொண்டாட்டம் தான். பொதுவாக சிறியவர்கள் முதல்
blog
Posted by 10-07-2022
பெண்களுக்காக நடத்தப்படும் சடங்குகளில் முக்கியமான ஒரு சடங்குதான் பூப்புனித நீராட்டு விழா
பூப்புனித நீராட்டு விழா என்பது பெண்களுக்காக மட்டுமே நடத்தப்படும் ஒரு சடங்கு